Saturday, May 15, 2010

எச்சில் கவிதைகள்

புலரும் பொழுதுகளின் நிறமில்லா ஜனனத்தில்
கருப்பு வெள்ளை கனவுகளில்
தலை அமிழ்ந்து முன்பல் தெரிய உறங்குகையில்
வாயோரம் எச்சிலாய் வழிந்து விடுகின்றன
இரவெல்லாம் நான் சுமந்த கவிதைகள் …..

சிறகுகள் இலவசம்

பறக்கத் தொடங்கினேன்.
எல்லைகளற்று தொலைவுகளற்று
குறிக்கோள் அற்று.
தரை விட்டு மெல்ல எழும்பி
புழுதி தவிர்த்து, உயரங்கள் கடந்து,
குளிர் உரைத்து, காக்கைகளுடன் சம்பாஷித்து,
கருடர்களுடன் நடந்த உரையாடலின் போது
அலுவலகத்தில் அணைக்கப்படாத என்
கணினி நினைவுக்கு வந்ததில்
தரை தட்டினேன் - மீண்டும்
பறக்க எத்தனிக்கையில் மனைவியின்
கைபேசி விளிப்பில் சிறகுகள் மறைத்து
சிரித்து வைத்தேன் - ஒவ்வொரு முறை
பறந்த போதும் சிறகுகள்
சுருக்கப்பட்டேன் . சுமைகளற்ற
யாரேனும் பறக்க முயலுங்களேன்.
என் சிறகுகள் இலவசம்.........